பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்தவர் கைது

பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்தவர் கைது
Published on

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை, இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மணிவிழா தெருவை சேர்ந்த மைதீன் ராவுத்தர் என்பவர் ஏற்கனவே மலேசியாவில் இருந்து வந்த நிலையில், மீண்டும் மலேசியா செல்ல வந்திருந்தார். அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மைதீன் ராவுத்தர் மீது ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தொழிலாளி மீது தாக்குதல்

*மணப்பாறை பாரதியார் நகரை சேர்ந்த ராஜேந்திரன்(54), வையம்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வம் என்பவரது வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தமிழ்செல்வத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷாஜஹான் (44) என்பவருக்கும் முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வையம்பட்டி கடைவீதியில் ராஜேந்திரனிடம் தகராறில் ஈடுபட்ட ஷாஜஹான், அவரை தாக்கினார். இதில் காயமடைந்த ராஜேந்திரன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷாஜஹானை தேடி வருகின்றனர்.

விசுவ இந்து பரிஷத் நிர்வாகி மீது வழக்கு

*துவரங்குறிச்சியை சேர்ந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.என்.பாண்டியன் வீட்டில், ஒரு பெண் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கு பாண்டியன் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக தகவல் வெளியானதால், அந்த பெண்ணை தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் பாண்டியன் மீது மணப்பாறை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலில் திருடியவர் சிக்கினார்

*திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள உருமுநாதர் கோவிலை சம்பவத்தன்று இரவு அர்ச்சகர் மணிகண்டன் பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோவிலின் நுழைவுவாயில் கதவின் பூட்ட உடைத்து, கோவிலுக்குள் இருந்த பித்தளை அகல் விளக்கு, பித்தளை மணி ஆகியவை திருட்டு போயிருந்தது. இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லால்குடி அருகே உள்ள பரமசிவபுரத்தை சேர்ந்த மகேஸ்வரனை(72) கைது செய்து, பூஜை பொருட்களை மீட்டனர்.

நகராட்சி பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்

*துவாக்குடி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஜெயந்தி(வயது 32). இவர் துவாக்குடி நகராட்சியின் 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் துவாக்குடி அண்ணா வளைவு அக்பர் சாலையை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவர் அந்த பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயந்திக்கும், முகமதுஇலியாசுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஜெயந்தி முகமது இலியாசிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதாகவும் அதற்கு முகமது இலியாஸ் தர மறுத்ததோடு ஆபாச வார்த்தைகளால் ஜெயந்தியை திட்டியதோடு, காலணியால் ஜெயந்தியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது இலியாசை தேடி வருகின்றனர்.

*விவசாயி கொலை வழக்கில் கைதான ஸ்டாலின், மணிகண்டன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதேபோல் திருட்டு வழக்கில் கைதான தனுஷ்ராஜ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

*திருச்சி பீமநகர் பகுதியை கீழத்தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கிருஷ்ணகுமாரை(வயது 35) கத்தியால் குத்திய சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

*தா.பேட்டை பகுதியில் சில இடங்களில் பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களாக திடீரென வயிற்றுப்போக்கு, தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, உடல் சோர்வு ஆகியவை ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர். அப்பகுதியில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டு, முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

*திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் பல்கேரியைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர், விடுதலை செய்யக்கோரி கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இதில் பல்கேரியாவை சேர்ந்தவர் நேற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com