கால இடைவெளி முடிந்தும் தமிழகத்தில் 8 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போடவில்லை பட்டியலை இணையதளத்தில் வெளியிட திட்டம்

முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கால இடைவெளி முடிந்தும் தமிழகத்தில் 8 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போடவில்லை. அவர்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
கால இடைவெளி முடிந்தும் தமிழகத்தில் 8 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போடவில்லை பட்டியலை இணையதளத்தில் வெளியிட திட்டம்
Published on

சென்னை,

தமிழகத்தில் முதலில் கொரோனா தடுப்பூசி மீது பொதுமக்களுக்கு தயக்கம் இருந்தாலும், தற்போது பெரும்பாலானோர் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்கின்றனர். அதில் தினசரி 2 லட்சம் பேர் வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில், பெரும்பாலானோர் 2-வது டோஸ் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர்.

முதல் டோஸ் தடுப்பூசி போட்டு காலக்கெடு முடிந்து 2-வது டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுப்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

8 லட்சம் பேர் போடவில்லை

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களில் குறிப்பிட்ட கால இடைவெளி முடிந்தும் 5 லட்சத்து 69 ஆயிரத்து 572 பேரும், கோவேக்சின் போட்டவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 600 பேரும் என 8 லட்சத்து 30 ஆயிரத்து 172 பேர் தடுப்பூசி போடவில்லை. இவர்கள் முதல் டோஸ் போட்டப்போது அளித்த விவரங்கள் அடிப்படையில் அவர்களை தொலைபேசி வாயிலாக அழைத்து தடுப்பூசி போடாததற்கான காரணம் மற்றும் ஏதேனும் சிரமம் இருப்பின் அவர்களுக்கான உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது.

மேலும் தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலும் இணையதளத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளோம். 2 டோஸ் தடுப்பூசி போட்டால் தான் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும். 3-வது அலை தொற்றையும் கட்டுப்படுத்த முடியும். எனவே முதல் டோஸ் போட்டவர்கள் தாங்களாகவே 2-வது டோஸ் போட முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com