ஆயிரம் தமிழ் வார்த்தைகளை அறிமுகம் செய்யும் திட்டம் அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்துவதற்காக மாதந்தோறும் ஆயிரம் தமிழ் வார்த்தைகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
ஆயிரம் தமிழ் வார்த்தைகளை அறிமுகம் செய்யும் திட்டம் அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்
Published on

சென்னை,

சென்னையில் தமிழ்நாடு இளம் சிந்தனையாளர் அமைப்பு மற்றும் ஏ.ஆர்.ஆர். அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:

தமிழ் உச்சரிப்பை இன்னும் வலிமைப்படுத்துவதற்காக மாதந்தோறும் ஆயிரம் புதிய தமிழ் வார்த்தைகளை அறிமுகம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்கவுள்ளது. மாநிலத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள் உதவியுடன் இந்த திட்டம் அமலாக்கப்படும்.

உதாரணமாக, கூகுள் தளத்தில் தமிழ் மொழியாக்கம், இலக்கணம் இல்லாமல் உள்ளதை காண முடிகிறது. ஆனால் மற்ற மொழிகள் நேர்த்தியாக மொழியாக்கம் செய்யப்படுகின்றன. இதற்கு காரணம், தமிழ் மொழியை சரியாக பரவச் செய்யாமல் விட்டதுதான் என்று நினைக்கிறேன்.

தமிழை புதிதாக கற்பவர்களுக்கு அது இன்னும் கடினமாக உள்ளது. எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் வகையில் இல்லை. உலக அளவில் தமிழ் 16வது இடத்தில் உள்ளது. எனவே தமிழை மேலும் வளரச் செய்வதற்காக, அதை எளிமைப்படுத்துவதோடு அதை சமூக வலைத்தளங்கள் மூலம் பரவச் செய்வது அவசியமாகிறது. அனைவருக்கும் தொடர்புடைய மொழியாக தமிழை வளரச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக பங்கேற்ற ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் இளம் உறுப்பினர் அல்லா முகமது காக்கர் பேசியதாவது:

தமிழ் மொழியும், தமிழ் கலாசாரமும் உண்மையிலேயே தனிச் சிறப்பு வாய்ந்தவை. கலாசார ஒருமைப்பாடு மற்றும் குடும்ப இணைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆப்கானிஸ்தானில் தமிழ் திரைப்படங்களை நாங்கள் திரையிடுகிறோம்.

தமிழ் பாரம்பரிய உணவுகள் அங்கு நீண்ட நாட்களாக கிடைக்கின்றன. போர்களால் ஆப்கானிஸ்தான் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போருக்கு பின்னரும் எங்கள் நாட்டை நாங்கள் கட்டிக்கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com