தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் - திருமாவளவன்

தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் சதித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் - திருமாவளவன்
Published on

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் காவிரிப் படுகையில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு செய்திருக்கும் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் இந்த சதித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் புதிதாக நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் திட்டத்தை அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு பகுதிகளில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கான ஏலத்துக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உணவுக் களஞ்சியமாகத் திகழும் இந்தப் பகுதிகளை முற்றாக சிதைத்துச் சீரழித்து பாலைவனம் ஆக்கும் இந்தக் கேடான திட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாஜகவின் கூட்டாளியான அதிமுக ஆட்சியில் இருந்தபோது டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் பலவற்றை பாஜக அரசு கொண்டு வர முயற்சித்தது.

அப்போது தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளும் விவசாய இயக்கங்களும் கடுமையாகப் போராடிய காரணத்தால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டு, டெல்டா பகுதிகள் யாவும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அங்கே நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு ஒன்றிய அரசு திட்டமிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டை சீரழிக்க வேண்டும் என்கின்ற பாஜகவின் தீய நோக்கத்தையே இது காட்டுகிறது.

ஏற்கனவே நிலக்கரி ஏலங்களில் அதானி நிறுவனத்துக்கு முறைகேடாக சலுகை காட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நிலக்கரி சுரங்கங்களை அவசரம் அவசரமாக பாஜக அரசு ஏலம் விட முயற்சிப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசு உரிய முறையில் விரைந்து இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மக்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்திவிட்டு டெல்டா பகுதிகளில் இந்தத் திட்டங்களை செயல்படுத்த முற்பட்டால் ஒன்றிய பாஜக அரசு கடுமையான மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com