துாத்துக்குடி மாநகராட்சியில் நீடிக்கும் அவல நிலை: தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு

தூத்துக்குடி ஏழுமலையான்நகரில் குடிநீர், சாலை, கழிவுநீர், வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதிகள் நிறைவேற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என அப்பகுதி மக்கள் மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர்.
துாத்துக்குடி மாநகராட்சியில் நீடிக்கும் அவல நிலை: தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு
Published on

துாத்துக்குடி,

துாத்துக்குடி மாநகராட்சி 15வது வார்டு ஏழுமலையான்நகர் பகுதியில் வகிக்கும் மக்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், "துாத்துக்குடி ஊராட்சி ஒன்றியமாக இருந்த போதும், நகராட்சியாக இருந்த போதும் மாநகராட்சியாக ஆன பிறகும் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் கழிவு நீர் வடிகால் வசதிகள் செய்து தரப்படவில்லை.

அனைத்து வீடுகளும் கட்டிட அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்டவை. முறையாக தீர்வையும் செலுத்தி வருகிறோம். மனைப்பிரிவு அமைத்தவர்கள் சாலை வசதி மற்றும் 21 மின்கம்பங்களுடன் கூடிய தெருவிளக்குகள் அமைத்துக் கொடுத்தார்கள். அதன் பின்னர், ஊராட்சி ஒன்றியமாக இருந்தபோதிலும், மாநகராட்சியாக ஆன பிறகும், எந்த ஒரு வசதிகளும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக இந்த நகரில் தண்ணீர் தொட்டி இருந்தும், அந்த தொட்டியில் தண்ணீர் இல்லாத அவல நிலை நீடிக்கிறது.

இது தொடர்பாக அப்போதுள்ள பஞ்சாயத்து தலைவரிடமும், பின்பு மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தவரிடமும், மாநகராட்சி கமிஷனர் மற்றும் அலுவலரிடமும் பல முறை நேரிலும் பதிவுத் தபால் மூலமாகவும் மனு அளித்தும், இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் கங்கையம்மாள் என்பவர், "நாங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருகின்றோம். எங்கள் பகுதியில் குடிநீர், சாலை, கழிவுநீர், வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதிகள் நிறைவேற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த மூர்த்தி அவர்கள், எங்கள் பகுதியில் கள ஆய்வு செய்து ஒரு வீடு இருந்தால் கூட அப்பகுதிக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவிட்டார். ஆனால் இன்றுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை புறக்கணிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com