ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு

விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் ஊர்வலமாக மனு கொடுக்க வந்த விவசாயிகளை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சாலை மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு
Published on

விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் ஊர்வலமாக மனு கொடுக்க வந்த விவசாயிகளை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சாலை மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நிலம் கையகப்படுத்தும் பணி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்கு மேல்மா கிராம பகுதியை சுற்றியுள்ள 9 கிராமங்களில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்கள் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 9 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நடைபயணமாக சென்று, செய்யாறில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு (நிலம் எடுப்பு) தங்கள் ஆட்சேபனைகளை மனுவாக அளிக்க திட்டமிட்டு இருந்தனர். அதன்படி நேற்று காலை 10 மணியளவில் நடைபயணம் செல்ல முயன்ற அவர்களை போலீசார் செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.

ஆனால் போலீசாரின் எதிர்ப்பை மீறி மேல்மா- எருமைவெட்டி சாலையில் 150 பெண்கள், 50 ஆண்கள் என 200 பேர் கறுப்புக் கொடி மற்றும் பதாகைகளை கையில் ஏந்தியபபடி சென்றனர். அவர்களை தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிகிச்சைக்காக...

இதனையடுத்து ஆண்களில் சுமார் 30 பேரை போலீசார் வேனில் ஏற்றினர். அதனை பெண்கள் தடுத்தபோது பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த விவசாயிகள் இருவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், போலீஸ் வேனில் ஏற்றப்பட்ட ஆண்கள் 30 பேரை விடுவிக்கக் கோரி பெண்கள் வேனின் இருபுறமும் தரையில் அமர்ந்தும் உருண்டு புரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் கழித்து போலீஸ் வேனில் இருந்தவர்களை போலீசார் விடுவித்தனர்.

தள்ளுமுள்ளுவில் இருவர் காயம் அடைந்ததை அறிந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் மதியம் 3 மணியளவில் திடீரென காஞ்சீபுரம் - வந்தவாசி சாலையில் மேல்மா கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருவண்ணாமலை மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பழனி சாலை மறியலில் ஈடுபட்டு இருந்த விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

போக்குவரத்து பாதிப்பு

இதில் சமரசம் ஏற்படவே மறியலில் ஈடுபட்டு இருந்தவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com