பொங்கல் பரிசு தொகுப்பு இன்றும் வழங்கப்படும்

கைரேகை பதிவாகவில்லை என்றால் கருவிழிப் பதிவு அடிப்படையில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரூ.3 ஆயிரம் ரொக்கத்துடன் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 8-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
அந்த வகையில் டோக்கன் தேதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பை இதுவரை வாங்கத் தவறியவர்கள் இன்று (புதன்கிழமை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று வரை 2 கோடியே 9 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரேஷன் கடைகளில் கைரேகை சரியாக பதிவாகாத முதியவர்களுக்கு கண் கருவிழி மூலம் சரிபார்த்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. முதியவர்களின் கைரேகைகள் சரியாக பதிவு ஆகாததால் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






