

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தலின் போது, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பியில் அப்பாவிகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி, வன்முறை வெறியாட்டம் நடத்தி இருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்குகளை பதிவு செய்து, அவர்களின் குடும்பத்தினருக்கு போலீசார் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது.
தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடுத்துவரும் அழுத்தம் காரணமாகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய போக்கை கைவிட்டு, வன் முறையை தூண்டியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்பாடி, ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டதை போலீசார் வேடிக்கை பார்த்தனர். தி.மு.க. மாவட்ட செயலாளர் காந்தியின் கட்டளைக்கு போலீசார் அடிபணிந்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணம் கற்பிப்பதற்காக பா.ம.க.வினர் மீது பழி சுமத்துவதை ஏற்க முடியாது.
முன்னாள் மத்திய மந்திரி அரங்க வேலு, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் கீ.லோ.இளவழகன் உள்பட 50 பேர் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமியின் தி.மு.க.வுக்கு ஆதரவு செயல்பாடு குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதால், பொன்பரப்பி கிராமத்தில், நடு வீதியில் பானைகளை உடைத்து, பா.ம.க. மற்றும் இந்து முன்னணியினர் நடத்தியுள்ள வன்முறை, கண்டனத்துக்கு உரியதாகும். இத்தகைய அராஜகத்தை, முளையிலேயே கிள்ளி எறிகிற வகையில், உறுதியான நடவடிக்கை எடுக்க போலீசார் தவறிவிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலும், இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அமைதிக்கு பங்கம் நேர்ந்துள்ளது. பா.ஜ.க.வும், அவர்களால் ஆட்டுவிக்கப்படுகிற தமிழக ஆளுங்கட்சியும் இணைந்து சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக ஆக்குகிற நடவடிக்கையால், பொது அமைதிக்கு ஆபத்து உருவாகி இருக்கிறது. சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிப்போர் மீது, போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொள்வதுடன், அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ உரிய பாதுகாப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.