கொள்ளை நடந்த பிறகு அதிகரிக்கும் மவுசு; ஒரே நாளில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்ற ரீல்ஸ் மதுமிதா

மதுமிதா கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சமுகவலைதள பக்கங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
கொள்ளை நடந்த பிறகு அதிகரிக்கும் மவுசு;  ஒரே நாளில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்ற ரீல்ஸ் மதுமிதா
Published on: 

இன்றைய காலக்கட்டத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏராளம். அவ்வாறு கணக்கு வைத்திருப்பவர்கள் வித்தியாசமான வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் அதிக பார்வையாளர்களை பெறுகிறார்கள். அதிக பார்வையாளர்களை பெறுபவர்களுக்கு அதன்மூலம் வருவாய் கிடைக்கும் என்பதால், பலர் சமூகவலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதிலேயே மூழ்கி விடுகின்றனர்.

இப்படித்தான் நாகர்கோவிலை சேர்ந்த மதுமிதாவும் தனது தனித்துவமான வீடியோக்களால் லட்சக்கணக்கான பார்வயைாளர்களை பெற்றுள்ளார். அவர் தனது வீட்டில் பணம் மற்றும் நகைகள் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டியே அதிக வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மதுமிதா கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சமுகவலைதள பக்கங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அவர் இதுவரை தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோக்கள், புகைப்படங்கள் என சுமார் 6,700-க்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதன்மூலம் லட்சக்கணக்கான பாலோயர்ஸ்களை பெற்றுள்ளார். மதுமிதாவின் பெரும்பாலான வீடியோக்கள் அவரது பிரம்மாண்டமான ஆடம்பர பங்களா, விலையுயர்ந்த கார்கள் மற்றும் பல்வேறு நகைக்கடைகளில் நகை வாங்குவது உள்ளிட்டவைகளே இடம்பெற்றிருக்கின்றன.

குறிப்பாக வீட்டின் படுக்கையறையில் கட்டுக்கட்டாக பணத்தை வைத்துக்கொண்டும், பணமழை பெய்வது போல் தனது மீதும், தன்னுடைய குழந்தையின் மீது ரூபாய் நோட்டுகளை போடும் ரீல்ஸ் வீடியோக்கள், பூஜை அறையில் நகைகளையும் பணத்தையும் பரப்பிவைத்து எடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

மதுமிதா தனது பல வீடியோக்களில், "நான் எப்போதுமே நகைகளை வீட்டில் வைக்க மாட்டேன்; பாதுகாப்பாக வங்கியின் லாக்கரில்தான் வைப்பேன்" என்று பெருமையுடன் கூறிவந்தார். ஆனால் நேற்று முன்தினம் இவர் தனது கணவருடன் நெல்லைக்கு சென்றிருந்த நேரத்தில், மர்மக் கும்பல் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 118 பவுன் நகைகள் மற்றும் பணத்தை துல்லியமாக கொள்ளையடித்துச் சென்றுள்ளது. தங்கள் வீட்டில் வைக்க மாட்டேன் என்று அவர் கூறிய நகைகள் தான் இப்போது கொள்ளை போயுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com