கோவில் விழாக்களில் முதல் மரியாதை நடைமுறை சமத்துவத்துக்கு எதிரானது: சென்னை ஐகோர்ட்டு கருத்து


கோவில் விழாக்களில் முதல் மரியாதை நடைமுறை சமத்துவத்துக்கு எதிரானது: சென்னை ஐகோர்ட்டு கருத்து
x

கோவில் விழாக்களில் முதல் மரியாதை நடைமுறை சமத்துவத்துக்கு எதிரானது என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை,

ஈரோடு மாவட்டம், பர்கூர் கிராமத்தில் உள்ள பந்தீஸ்வரர் கோவில் மகா பெரிய குண்டம் விழாவில், முதல் மரியாதை வழங்க கோரி, தேவராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், 'கோவில் வழக்கப்படி எனது குடும்பத்தினர் தலைமையில் சாமி ஊர்வலம் நடத்தப்படும். எங்கள் குடும்பத்தினருக்கு தான் முதல் மரியாதை வழங்கப்படும். அந்த வகையில் எனக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'பல கோவில் விழாக்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட காரணமே, முதல் மரியாதை தான். கோவில்களில் முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளைவிட தங்களை மேலானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர். இது, விழாக்கள் நடத்தும் நோக்கத்தையே வீழ்த்தி விடுகிறது.

இதுபோன்ற மரபுகள், சமத்துவத்துக்கு எதிரானது. கடவுள் முன் அனைவரும் சமம். கோவில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும்' என தெரிவித்தார். விசாரணை முடிவில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

1 More update

Next Story