

சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவின் 16 மாநிலங்களில் நடைபெற்று வரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்ட ஆய்வில், சாதிகளை குறிப்பிடுவதற்கான இடம் காலியாக விடப்பட்டு, அதில் சாதியின் பெயரை எழுதும் முறை கடைபிடிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன. தோல்வியடைந்த இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கமே சிதைக்கப்பட்டு விடக்கூடும்.
நாட்டில் சமூகநீதியை முழுமையாக பாதுகாக்கும் நோக்கத்துடன், மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய ஆட்சியாளர்களை பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதன் பயனாக 2027-ம் ஆண்டில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடைபெறும்.
முதல்கட்டமான வீட்டுப்பட்டியல் தயாரிப்பு 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களிலும், இமாலய மலைப்பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களிலும் இந்தக் கணக்கெடுப்பு தொடங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் வீட்டுப்பட்டியல் தயாரிக்கும் பணி ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும். இதில் வீடுகளில் உள்ள வசதிகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். சாதி உள்ளிட்ட தனி நபர் விவரங்கள் இரண்டாம் கட்டமான மக்கள்தொகை எண்ணிக்கையின் போது சேகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமான மக்களை எண்ணும் பணி நாடு முழுவதும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் நிலையில், அதற்கான முன்னோட்ட ஆய்வு பணிகள் 16 மாநிலங்களில் இப்போது நடைபெற்று வருகின்றன. அதில் ஒவ்வொருவரிடமும் மாதிரி வினாக்கள் தெரிவிக்கப்பட்டு, அது குறித்த விவரங்கள் பெறப்பட்டு செயலிகளில் பதிவு செய்யப்படும். மாதிரி வினாக்கள் பட்டியலில் சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் ஒதுக்கப்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை எழுதும் முறை பின்பற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறை சாதிவாரி கணக்கெடுப்பில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும்.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் சாதியின் பெயரைக் கடந்து உள்பிரிவுகளால் தங்களை அழைத்து கொள்வார்கள். ஆனால், அந்த உட்பிரிவுகளின் பெயர்கள் அரசால் பயன்படுத்தப்படும் சாதிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. இத்தகைய சூழலில், மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அப்படியே நிரப்பி, அது சாதியின் பெயராக இல்லாமல், உட்பிரிவின் பெயராக இருந்தால், ஒரு மாநிலத்தில் அரசின் பட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக சாதிகள் இருப்பதாக கணக்கில் காட்டப்படும். இது குழப்பத்தை விளைவிக்கும்.
அதற்கு மாறாக, அரசின் பட்டியலில் உள்ள சாதிகளை வரிசைப்படுத்தி, அதிலிருந்து மக்களை அவர்களின் சாதியை தேர்ந்தெடுக்க செய்து, அந்த சாதியின் பெயரையும், எண்ணையும் பதிவு செய்வதே பொருத்தமாக இருக்கும். அப்போது தான் அரசிடமுள்ள சாதிகள் விவரமும், மக்கள் தெரிவிக்கும் சாதிகள் விவரமும் ஒத்துப்போகும்.
2011-ம் ஆண்டில் மத்திய அரசின் சார்பில் சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்பட்டது. அதற்கான வினாக்கள் பட்டியலில் இதே போல் தான் சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் விடப்பட்டு, மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அதில் குறிப்பிடும் முறை பின்பற்றப்பட்டது. அதன் விளைவு அந்தக் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 46 லட்சத்து 70 ஆயிரம் சாதிகள் இருப்பதாக தெரியவந்தது. இந்தியாவில் 1931-ம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் 4147 சாதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், 2011 கணக்கெடுப்பில் 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாகக் கூறப்பட்டது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதனால், அந்த கணக்கெடுப்பு விவரங்கள் கைவிடப்பட்டன.
அதே நேரத்தில், கடந்த 2023-ம் ஆண்டு பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில், அரசின் பட்டியலில் உள்ள சாதிகள் வரிசைப்படுத்தப்பட்டு, அதை மக்கள் தேர்ந்தெடுத்து நிரப்பும் முறை கடைபிடிக்கப்பட்டது. அதன் பயனாக பிகார் மாநில சாதிவாரி சர்வேயில் துல்லியமான விவரங்கள் கிடைத்தன. அதனால் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் இதே முறையை பின்பற்ற வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கமே, ஒவ்வொரு சமூகத்தின் மக்கள்தொகை விவரங்களை கண்டறிந்து, அவர்களின் சமூக, பொருளாதார சூழல்களுக்கு ஏற்ற வகையில் சமூகநீதி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவது தான். மாறாக, குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில், சாதி விவரங்கள் பதிவு செய்யப்பட்டால், அது சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கத்தையே சிதைத்து விடும். எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக மக்களை எண்ணும் பணி நடைபெறும் போது, அரசின் சாதிகள் பட்டியலைக்காட்டி, அதிலிருந்து அவர்களின் சாதி மற்றும் எண்ணை பதிவு செய்யும் முறையை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் கடைபிடிக்க வேண்டும்.