குடியரசு தின விழாவில் பங்கேற்க நீலகிரி பெண்ணுக்கு ஜனாதிபதி அழைப்பு

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
சென்னை,
நாடு முழுவதும் 77-வது குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துவார். இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
இதையொட்டி தற்போதே, டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் தலைவர்கள், பல்வேறு துறைகளின் சாதனையாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நந்தட்டி அருகே மில்லிகுன்னு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி இந்திராணிக்கு நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது. இந்த கடிதத்தை கொடுக்க கூடலூர் உட்கோட்ட தபால் நிலைய ஆய்வாளர் ராமஜெயனேலு தலைமையில் அலுவலர்கள், தபால்காரர் ஆகியோர் இந்திராணி வீட்டுக்கு நேரில் சென்றனர். ஆனால் வீட்டில் இந்திராணி இல்லை.
தொடர்ந்து விசாரித்த போது அதேபகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் இந்திராணி தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருப்பது தெரியவந்தது. அங்கு சென்று ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை இந்திராணியிடம் வழங்கினர். இதையடுத்து கடிதத்தை பிரித்து படித்து பார்த்தபோது, அதில் டெல்லியில் நடைபெறும் 77-வது குடியரசு தின விழாவில் பங்கேற்க வரும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைக்கேட்ட இந்திராணி, குடியரசு தின விழாவில் பங்கேற்க தனக்கு ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பு வந்ததை எண்ணி பூரிப்படைந்தார். அவருக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.






