மார்க்கெட்டுகளில் மீன்கள் விலை சரிவு

கட்டுமாவடி, மணமேல்குடி மார்க்கெட்டுகளில் மீன்கள் விலை குறைந்துள்ளது.
மார்க்கெட்டுகளில் மீன்கள் விலை சரிவு
Published on

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, மணமேல்குடி ஆகிய இடங்களில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் சுமார் 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், ராமேசுவரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து வாங்கி செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் அதிகமான மக்கள் விரதம் இருக்கின்றனர். இதனால் மணமேல்குடி, கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுகளில் மீன்கள் விலை குறைந்துள்ளது. நகரை, செங்கனி, ஓரா, ஊடகம் வகையான மீன்கள் கிலோ ரூ.150-க்கு விற்பனையாகிறது. இதேபோல் இறால் கிலோ ரூ.200-க்கு விற்பனையாகிறது. நண்டு விலையில் மாற்றமில்லாமல் கிலோ ரூ.400-க்கு விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com