தக்காளி விலை கிடு, கிடு உயர்வு

தொடர் மழையால் வரத்து குறைந்ததால், தக்காளி விலை கிடு, கிடு என உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை கிடு, கிடு உயர்வு
Published on

ஊட்டி, 

தொடர் மழையால் வரத்து குறைந்ததால், தக்காளி விலை கிடு, கிடு என உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைவு

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைகிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. அறுவடைக்கு பின்னர் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல் சமவெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது.

இந்தநிலையில் சமவெளி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால், விளைநிலங்களில் காய்கறிகள் அழுகி வருகின்றன. மழை காரணமாக விளைச்சலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நீலகிரிக்கு தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக அதன் விலை கிடு கிடுவென விலை அதிகரித்து வருகிறது. ஊட்டி மார்க்கெட், உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.65 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

விலை அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் 2 டன் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து 75 சதவீதம், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 25 சதவீதம் கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் ஓணம் பண்டிகையையொட்டி, ஊட்டியில் இருந்து கேரட் அதிகளவு கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் ஊட்டி மார்க்கெட்டில் கேரட் கிலோ ரூ.100 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல் மற்ற காய்கறிகள் விலையும் அதிகரித்து இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கொத்தமல்லி இலை கட்டு ரூ.30-க்கு விற்பனையாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். உழவர் சந்தையில் மற்ற காய்கறிகள் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:- கத்தரிக்காய்-ரூ.24, வெண்டைக்காய்-ரூ.45, சின்ன வெங்காயம்-ரூ.45, பெரிய வெங்காயம்-ரூ.28, அவரைக்காய்-ரூ.38, பச்சை மிளகாய்-ரூ.55, முருங்கைக்காய்-ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com