

கோவை,
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்த்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்வி அமைச்சர் பேசும்போது, இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றுவது தங்களின் கொள்கை முடிவு என்று கூறுகிறார். பொத்தாம் பொதுவாகக் கொள்கை முடிவுகளை எடுக்காமல், நிதானமாக சிந்தித்து மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் எவை பலன் தருமோ, அந்தத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நான் முதல்-அமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன். புதுச்சேரி போன்ற இடங்களில் பி.எம் ஸ்ரீ திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சிறப்பாகச் செயலாற்றப்பட்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பது நடக்கவில்லை; திமுக தோற்க வேண்டும் என்பதே நடந்துள்ளது. சனாதனம் குறித்து சிலர் கூறும் கருத்துகளை விஜய் கண்டிக்க வேண்டும். கிட்னி திருட்டு குறித்த குற்றச்சாட்டில் விசாரணை விரைவுபடுத்தப்பட வேண்டும். கடந்த ஆட்சியில் இருந்த பிரச்சினைகள் தற்போது அதிகரித்துள்ளன என்ற அச்சம் இருக்கிறது.
முதல்-அமைச்சரின் அறை என்பது மிகவும் மரியாதைக்குரிய ஒரு இடமாகும். முதல்-அமைச்சர் தனது அறையில் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போதே, அங்கு 'ரீல்ஸ்' எடுக்கப்பட்ட நிகழ்வு மிகவும் கண்டனத்திற்குரியது. முதல்-அமைச்சர் அறையில் இது போன்ற தேவையற்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்பதில், விஜய் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தேர்தல் முடிவில் மழை வரும் என நினைத்தோம்; ஆனால் சுனாமி வந்தது. இந்த தோல்வி எதிர்கால வெற்றிக்கான அடிப்படையாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். அண்ணாமலை மீண்டும் மாநில தலைவராக வருவாரா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் கை கூப்பி சென்றார்.