புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு விழா தேர் பவனி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பரலோக மாதா பேராலயத்தில் விண்ணேற்பு திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது.
புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு விழா தேர் பவனி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித பரலோக மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் விண்ணேற்பு திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. அன்று இரவு 7 மணியளவில் ஆலய வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் சிவகங்கை மறைமாவாட்ட ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் திருவிழா கொடியேற்றப்பட்டது.

விழா நாட்களில் தினமும் மாலை 6 மணியளவில் மறையுரை சிந்தனை மற்றும் நற்செய்தி வழங்கப்பட்டது. கடந்த 9-ந்தேதி காலை 9 மணியளவில் மரியன்னை மாநாடு நிகழ்ச்சியும், 10-ந் தேதி காலை 8.30 மணியளவில் புதுநன்மை விழாவும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. முக்கிய விழாவான நேற்று அதிகாலை 2 மணியளவில் மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து தலைமையில் தேரடி திருப்பலியும், பரலோக மாதா மற்றும் விண்ணரசி மாதா தேர்களில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்துகொண்டு தேருக்கு பூக்கள் தூவியும், தேருக்கு பின்னால் கும்பிடு சேவை நிகழ்த்தியும் வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் ஆலய வளாகத்தில் மெழுகு திரி ஏற்றி உருக்கமாக பிரார்த்தனை செய்தனர். காலை 6 மணி மற்றும் 8 மணிக்கு பங்குத்தந்தையர்கள் தலைமையில் சிறப்பு திருவிழா திருப்பலி நடந்தது.

தொடர்ந்து கேரளா, பாம்பே உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக நேற்று மதியம் 12 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், 2 மணியளவில் ஆங்கிலத்தில் திருப்பலியும், மாலை 4 மணியளவில் இந்தியில் திருப்பலியும் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் திருப்பலி மற்றும் நற்கருணை பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு மக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, செவல்பட்டி, குருவிநத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த இறைமக்கள் மற்றும் ஆலய திருத்தல அதிபர் மோயீசன், உதவி பங்குத்தந்தை நிரோ ஸ்டாலின் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com