

கோவிலில் தீ விபத்து
குமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோவிலில் தேவ பிரசன்னம் பார்ப்பதற்கு குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்காக கேரள மாநிலம் வயநாடை சேர்ந்த ஜோதிடர் ஸ்ரீநாத் மற்றும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தேவ பிரசன்னம் பார்க்க தேர்வு செய்யப்பட்டனர்.
தேவ பிரசன்னம்
இவர்கள் நேற்று காலை மண்டைக்காடு கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியை தொடங்கினர். முன்னதாக பாறசாலை ராஜேஷ் போற்றி சிறப்பு கணபதி ஹோமம் நடத்தினார். தேவபிரசன்னம் பார்த்து எடுக்கும் முடிவின் அடிப்படையில் பரிகார பூஜைகள் நடைபெறும் என்பதால், பக்தர்கள் மண்டைக்காடு கோவில் முன்பு திரளாக குவிந்தனர். கொரோனா ஊரடங்கால் அவர்களில் அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலோரத்தில் இருக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உருவாகும் முன்பு, மேற்கே உள்ள சாஸ்தா கோவில் மூல கோவிலாகும். இந்த 2 கோவில்களுக்கும் தொடர்பு உண்டு. இந்த கோவிலில் பகவதி அம்மன் மட்டுமல்ல, பிற தேவதைகளும் உண்டு. இது ரத்த காயத்தினால் வெளிப்பட்ட சுயம்பு மூலவர் கொண்ட கோவில். தேவிக்கு அதிக சக்தி உள்ளது. அந்த சக்தியை அறியாமல் நிர்வாகம் செயல்பட்டதால், பிரச்சினைகள் நடந்து வருகிறது.
பூஜைகள் முறையாக...
பூஜைகள் முறையாக நடைபெற வேண்டும். கோவிலில் லட்சார்ச்சனை, திருவிழா பூஜைகள், பக்தர்களால் நடத்தப்படும் பூஜைகள், அன்னதானம் போன்றவை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும். மாசிக்கொடையின் போது நடந்த ஒரு பூஜை, சமீப காலமாக நடத்தப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்றும் (செவ்வாய்க்கிழமை) கோவிலில் தவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.