இன்று முதல் நடக்கவிருந்த மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

இன்று முதல் நடக்கவிருந்த மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்தன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர்

இந்த நிலையில், இந்த மனுக்கள் இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கே எம் விஜயன் மற்றும் மனோகரன் ஆகியோர், "தொழில் தகராறு சட்டத்தின்படி, சமரச பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு, வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க முடியாது. எனவே, இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். சட்டத்தின்படி வேலை நிறுத்த போராட்டத்திற்கு 6 வாரங்கள் முன்கூட்டியே அறிவிக்கையானது வெளியிடப்படவில்லை" என்று வாதிட்டனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "மின் வாரிய ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக இன்று காலை பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை கடந்த ஐந்தாம் தேதியே அனுப்பிய போதும் வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தது சட்டவிரோதமானது. மேலும், மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், ஆவின் பால் வினியோகம், மருத்துவமனை செயல்பாடுகள், பள்ளி கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கும். எனவே இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மின்வாரிய ஊழியர்கள் தொழிற்சங்கம் விடுத்துள்ள வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கக் கூடும் எனவும் பேச்சுவார்த்தை நடைபெறும் நேரத்தில் அதன் முடிவுகளை தெரிந்து கொள்ளும் முன் வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது எனக்கூறி, வேலை நிறுத்ததுக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து கோர்ட்டின் உத்தரவின் பேரில் வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக மின்வாரிய தொழிற்சங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com