நீட் தேர்விற்கு தடை விதிக்கும் வரை போராட்டம் தொடரும்

தமிழகத்தில் நீட் தேர்விற்கு தடை விதிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று விழுப்புரத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
நீட் தேர்விற்கு தடை விதிக்கும் வரை போராட்டம் தொடரும்
Published on

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் கவர்னரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதன்படி விழுப்புரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் நகராட்சி திடலில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை

போராட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:- முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்த போது தமிழகத்தில் நீட் தேர்வை நுழைய விடாமல் நீதிமன்றத்திற்கு சென்று தடையானை பெற்றார். இதனால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராகி நாடு முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் இந்த நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் விட்டுவிட்டனர்.

இருந்தாலும் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது நீட் தேர்வை நுழையவிடாமல் தடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விட்டு விட்டது. நீட் தேர்வு நுழைவு காரணமாக வடமாநிலத்திலிருந்து பலர் இங்கு வந்து மருத்துவப்படிப்பில் சேருகின்றனர். இதனால் தமிழக மாணவ, மாணவிகளுக்கு இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

போராட்டம் தொடரும்

அதன்படி ஆட்சிக்கு வந்த பின் சட்டமன்றத்தில் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால் இதற்கு உரிய பதில் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தடை விதிக்கும் வரை தி.மு.க.வின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர்கள் முருகன், இளந்திரையன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன், மாணவரணி அமைப்பாளர் வினோத், மருத்துவர் அணி அமைப்பாளர் காவியவேந்தன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சுவைசுரேஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாலாஜி, நகர செயலாளர்கள் சர்க்கரை, ஜீவா, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, முருகவேல், கல்பட்டுராஜா, ஒன்றியக்குழு தலைவர்கள் சச்சிதானந்தம், கலைச்செல்வி, நகர துணை செயலாளர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com