பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரும் வரை போராட்டம்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரும் வரை போராட்டம் என்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசு, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதவர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, தமிழக அரசு 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். வருகிற 6-ந் தேதி ஜாக்டோ- ஜியோ அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடத்தப்படும்.
பேரையூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியையாக பணியாற்றிய ரோசன் கதீஜா பீவி என்பவர் கடந்த அக்டோபர் மாதம் திடீரென மரணமடைந்தார். அவர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றி வந்ததால், அவரது மரணத்துக்கு பின்னர் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அவரது 2 மகன்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்தது.
எனவே, பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் பிற சங்கங்களின் உதவியுடன் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 700 திரட்டி வழங்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க வேண்டுமெனில், அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.






