

தென்காசி,
தமிழகத்தில் கடந்த ஆட்சியை விட த.வெ.க. ஆட்சி சிறப்பாக உள்ளதாக பொதுமக்களே சொல்கிறார்கள் என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறினார்.
மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலை சிட்கோ அருகே தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக புதிய தலைமை அலுவலகத்தின் திறப்பு விழா நடந்தது. தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான ராஜீவ் மற்றும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தார்கள்.
விழாவுக்கு மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் அமைச்சர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்ட கேள்விக்கு அமைச்சர் ராஜீவ் கூறுகையில், "தென்காசி மாவட்டத்தில் அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டு வருகிறது. நீர்நிலை அருகில் குடியிருப்பவர்களை தனியார் மண்டபங்களில் தங்க வைக்கவும், உணவு, மருத்துவ வசதிகள் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது” என்றார்.
முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. ஆட்சியில் அதிகளவில் பாலியல் குற்ற சம்பவங்கள், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளாரே? என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறுகையில், "மு.க.ஸ்டாலின் கூறியதில் ஒன்றிலாவது உண்மை இருக்கிறதா? என்று மக்களிடம் கேட்டால் கடந்த ஆட்சியை விட த.வெ.க. ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். முன்பைவிட இப்போது அதிகளவில் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. என்பது தான் உண்மை" என்றார்.