இணையதளம் இயங்காததால் ஜமாபந்திக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

பட்டா மாற்றம் செய்வதற்காக பதிவேற்றம் செய்யக்கூடிய இணையதளம் இயங்காததால் ஜமாபந்திக்கு வந்த பொதுமக்கள் மனு கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இணையதளம் இயங்காததால் ஜமாபந்திக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம்
Published on

வேப்பந்தட்டை

பட்டா மாற்றம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் நேற்று வெங்கலம் குறுவட்ட பகுதிக்கு ஜமாபந்தி தொடங்கி நடைபெற்றது. அப்போது உடும்பியம், பூலாம்பாடி கிழக்கு மற்றும் மேற்கு, வெங்கனூர், தழுதாழை, அரும்பாவூர், மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை மேற்கு மற்றும் கிழக்கு, வெங்கலம் மேற்கு மற்றும் கிழக்கு, வேப்பந்தட்டை வடக்கு மற்றும் தெற்கு, வெண்பாவூர் ஆகிய வருவாய் கிராமங்களிலிருந்து வந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு வாங்குவதற்காக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் அமர்ந்து இருந்தனர். ஆனால் பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவுக்கு பதிவேற்றம் செய்யக்கூடிய இணையதளம் இயங்காததால் மனுக்கொடுக்க வந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இணையதள கோளாறினால்...

அதாவது கடந்த 19-ந் தேதி முதல் நேற்று வரை 6 நாட்களாக பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு குறித்து பதிவேற்றம் செய்வதற்கான தமிழ் நிலம் என்ற அரசு இணையதள செயலி இயங்காமல் உள்ளதால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகா பகுதிகளிலும் நடைபெறக்கூடிய ஜமாபந்திக்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் மனு கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற முக்கியமான இணையதள செயலி இயங்காத நேரத்தில் ஜமாபந்தி நடத்தி வருவதால் பெயரளவில் மட்டுமே ஜமாபந்தி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஜமாபந்தியானது கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தினால் முறையாக நடைபெறாமல் இருந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறக்கூடிய இந்த ஆண்டு ஜமாபந்தியில் இதுபோன்று இணையதள கோளாறினால் பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடிய மனுக்கள் முழுமையாக பெறாமல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து முடங்கிக் கிடக்கும் இணையதள செயலியை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com