கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 10 செமீ கொட்டியது

கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 10 செ.மீ. கொட்டி தீர்த்தது.
கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 10 செமீ கொட்டியது
Published on

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கடலூரில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு குளிர்ந்த காற்று வீசியது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. இந்த மழை சுமார் மணி நேரம் கொட்டியது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது.

ஆனால் காலையில் மழை முற்றிலும் ஓய்ந்து, வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இதேபோல் பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. மேலும் பகலில் சுட்டெரித்த வெயிலால் ஏற்பட்ட புழுக்கத்தால் தவித்த பொதுமக்கள், இரவில் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

பரங்கிப்பேட்டையில் அதிகபட்சம்

இதற்கிடையே தாழநல்லூர், வெண்கரும்பூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை பெண்ணாடம், மாளிகை கோட்டம், தாழநல்லூர், வெண்கரும்பூர் ஆகிய இடங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் குவியல்களாகவும், மூட்டைகளாகவும் அடுக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.

இதில் நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்த பெரும்பாலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

இதேபோல் தொழுதூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, விருத்தாசலம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 102.4 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக குப்பநத்தத்தில் 9.4 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com