

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பொய்ப் பரப்புரையைத் துகிலுரிக்கும் விதமாக, நமது பாரதப் பிரதமர் மோடியின் கடந்த பதினோராண்டுகால ஆட்சியில் தமிழகத்தின் ரெயில்வே உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு ரூ. 7,611 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும், இது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட மொத்த பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிகம் என்பதையும் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் மீண்டுமொருமுறை விளக்கிக் கூறியுள்ளார் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
மேலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையைக் கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களுடன் இணைக்கும் வகையில், சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - ஐதராபாத் ஆகிய இரு புதிய புல்லட் ரெயில் வழித்தடங்களுக்கு இந்த வருட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.
ஐதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய முப்பெரும் நகரங்களை இணைக்கும் முக்கோண வடிவிலான இந்தத் திட்டம், ஒட்டுமொத்தத் தென்னிந்திய மாநிலங்களின் பொருளாதாரம், போக்குவரத்து, சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றின் வளர்ச்சியைப் பெரிதளவில் மேம்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அதுமட்டுமன்றி நமது மத்திய அரசின் அம்ரித் பாரத் ரெயில் நிலையத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 77 ரெயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருவதும், 8 வந்தே பாரத் ரெயில்கள் மற்றும் 4 புதிய அம்ரித் பாரத் ரெயில்கள் தொடங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ரெயில்வே திட்டங்களுக்குத் தேவையான 4,326 ஹெக்டேர் நிலத்தில் 1,052 ஹெக்டேர் நிலம் அதாவது வெறும் 24 சதவீதம் மட்டுமே கையகப்படுத்திக் கொடுத்து தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாகத் திமுக உறுதியுடன் நின்றாலும், நமது மத்திய அரசு தமிழக மக்களுக்குத் தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் தாயுள்ளத்துடன் அள்ளித்தரும் என்பதற்கான மற்றுமொரு உதாரணம் இது.
தமிழகத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு பல வளர்ச்சித் திட்டங்களைத் தொலைநோக்குப் பார்வையுடன் அள்ளித் தரும் நமது பாரதப் பிரதமருக்கும், மத்திய அமைச்சரவைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.