தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - டி.டி.வி. தினகரன்

கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக் கூட செவிசாய்க்க மறுக்கும் தி.மு.க. அரசின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5-வது நாளாக போராட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசாணை 62-ன்படி சமவேலைக்கு சம ஊதியம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய ஊதிய ரசீது, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாத தி.மு.க. அரசால், தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தூய்மைப் பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு வாரவிடுப்பு, கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி, நிரந்தர ஊதியம், ஓய்வூதியம் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதிகளை அள்ளிவீசிய தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின்பு அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com