குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது

திட்டக்குடி பகுதியில் 3 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழந்தது. மேலும் பெண்ணாடத்தில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது
Published on

திட்டக்குடி, 

திட்டக்குடி பகுதியில் 3 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழந்தது. மேலும் பெண்ணாடத்தில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

சுட்டெரித்த வெயில்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இதனால் சாலையில் அனல் காற்று வீசியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வெப்பத்தை தாங்க முடியாமல் வயதானவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

இந்த நிலையில் திட்டக்குடி, பெண்ணாடம், ஆவினங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இரவு 11 மணிக்கு குளிர்ந்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் சுமார் 3 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான இடங்களில் குளம்போல் தேங்கி நின்றது. குறிப்பாக திட்டக்குடி புதிய அண்ணாநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

இதில் சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். தெருக்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த தண்ணீர் நேற்று மதியம் வரை வடியாததால் அப்பகுதி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் வசதி அமைத்து கொடுக்கப்படவில்லை. இதனால் மழை நின்று நீண்ட நேரம் ஆனபிறகும் தண்ணீர் வெளியேறாமல் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது. இதன் காரணமாக எங்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வாக எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என்றனர். இதையடுத்து நகராட்சி ஊழியர்கள், அப்பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கவர் இடிந்து விழுந்தது

இதனிடையே இந்த மழையில் சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி ஒருவர் இறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- பெண்ணாடம் சிலப்பனுர் சாலை அருகில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 55). கட்டிட தொழிலாளி. இவரது கூரை வீட்டின் சுவர் மழையின் நனைந்து ஊறிப்போயிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் சேகர் தனது வீட்டில் அமர்ந்து இருந்தார்.

அப்போது வீட்டின் சுவர் திடீரென இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழை அளவு

இதேபோல் சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஆனால் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்தது. இதனால் மழை பெய்த சுவடே தெரியாத அளவுக்கு இருந்தது.

இருப்பினும் நேற்று காலை 8.30 மணி வரை நிலவரப்படி அதிகபட்சமாக தொழுதூரில் 37 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 7.64 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

கலெக்டர் அலுவலகம் -23, கீழசெருவாய்-23, பரங்கிப்பேட்டை 18.8, லக்கூர் -18.3, கடலூர் -18, பெலாந்துறை- 15.8, சேத்தியாத்தோப்பு -8, வேப்பூர் -7, வடக்குத்து -6, லால்பேட்டை -6, கொத்தவாச்சேரி -4, காட்டுமன்னார்கோவில்-4, குடிதாங்கி 2.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com