மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது..!

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
Image Courtesy:@CMOTamilnadu
Image Courtesy:@CMOTamilnadu
Published on

சென்னை,

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் இந்த தனித்தீர்மானத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்துக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதுகுறித்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ. கே.பி. அன்பழகன், நுழைவுத் தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் பாதிப்படைவார்கள்.

மேலும் வரும் காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகிவிடும் என்பதால் நுழைவுத் தேர்வு அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நுழைவுத் தேர்வை கைவிட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. எனவே, மத்திய பல்கலைகழக நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், மத்தியப் பல்கலைகழகங்களில் வேண்டுமென்றால் நுழைவுத் தேர்வுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று உள்ளது. எனவே, மத்திய பல்கலைகழக நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜக தவிர பிற கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஒருமனதாக இந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com