8¼ லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவு நாளை வெளியீடு: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

8¼ லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.
8¼ லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவு நாளை வெளியீடு: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
Published on

சென்னை,

பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு நாளை(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட இருப்பதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மார்ச் 2020 பிளஸ்-1 பொதுத்தேர்வு மற்றும் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற பிளஸ்-2 மறுதேர்வு முடிவுகள் வருகிற 31-ந்தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் தங்களுடைய பதிவு எண், பிறந்ததேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் பார்க்கலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் உள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) தேர்வு முடிவு வெளியிடப்படும்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வின் இறுதிநாள் தேர்வு கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டு, காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com