உதிப்பது உதயசூரியன்தான்: சீர்காழியில் ஒலித்த மக்களின் குரல் - மு.க.ஸ்டாலின் பதிவு

எங்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதிப்பது உதயசூரியன்தான்: சீர்காழியில் ஒலித்த மக்களின் குரல் - மு.க.ஸ்டாலின் பதிவு
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் தனது பிரசாரத்தை கடந்த மாதம் 31-ந்தேதி அவரது சொந்த ஊரான திருவாரூரில் தொடங்கினார்.

ஏற்கனவே 2 கட்ட பிரசாரத்தை முடித்த அவர் 3-வது கட்ட பிரசாரத்தை புதுச்சேரியில் நேற்று தொடங்கினார். இன்று மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

இன்று காலையில் சீர்காழியில் தென்பாதி பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் நின்றுகொண்டிருந்த பொதுமக்களிடமும் நலம் விசாரித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில் எங்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

உதிப்பது உதயசூரியன்தான்: சீர்காழியில் ஒலித்த மக்களின் குரல். அண்ணன் வைகோவின் ஆதரவு பெற்ற மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு ஆதரவாக இன்று காலை ஒன்றரை மணி நேரம் சீர்காழியின் வீதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தேன்.

எங்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது. திராவிட மாடல் அரசின் திட்டங்களை நான் கூறுவதற்கு முன், மக்களே என்னிடம் சொல்லி மகிழ்கிறார்கள். சீர்காழியிலேயே அவரவர் பகுதிகளில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என என்னை உரிமையோடு நிறுத்திச் சொல்கிறார்கள். இதைவிட வேறென்ன வேண்டும்! மீண்டும் கழக ஆட்சியே! வெல்வோம் ஒன்றாக! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com