

கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் டி.கே.பாண்டியன், செயலாளர் பூமிநாதன், பொருளாளர் முகம்மது உசேன் உள்ளிட்டோர் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாசை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், "கடையம் பஸ்நிலையத்தில் இருந்து ராமநதி அணை வரையிலான சாலை கடந்த 2011-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை ஏராளமான விவசாயிகள் பயன்படுத்தி வருவதால் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். கடையம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கு கடந்த 30 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. அதனை அகற்றி நவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட கூட்ட அரங்கு கட்டித்தர வேண்டும். கடையம் பகுதிகளில் நதிக்கரை ஓரமாக மின்சார சுடுகாடு அமைத்து தர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து தலைவர்கள் ரவிச்சந்திரன், அழகுதுரை என்ற அருணாசலம், மதியழகன், செண்பகவல்லி, கணேசன், மலர்மதி, மாரியப்பன், ஜன்னத் பர்வீன், முகைதீன்பீவி உள்பட பலர் உடனிருந்தனர்.