

சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
சர்வதேச பூங்கா
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.4,500 கோடி முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறும் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1,000 கோடி செலவில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா ஒன்று அமைக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தின் மாநல்லூரில் ஒரு மின் வாகனப் பூங்கா, காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்திப் பூங்கா, மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனம், ஆகிய இடங்களில் 3 உணவுப் பூங்காக்களும் நிறுவப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு 3.62 கோடி வேட்டி - சேலைகள்
2021-22-ம் ஆண்டில் ரூ.490.27 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டுடன், மாநிலத்திலுள்ள கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், பொங்கல் திருநாளை முன்னிட்டு, 1.81 கோடி சேலைகள் மற்றும் 1.81 கோடி வேட்டிகள் வழங்கப்படும்.
தமிழ்நாட்டிற்குள் அமைந்துள்ள விசைத்தறிகள் மற்றும் நெசவு அலகுகளில் இருந்து பொருட்களை பயன்படுத்தி 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு இலவச பள்ளி சீருடைகளை வினியோகிக்கும் திட்டம், செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்காக ரூ.409.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்னணு முறையில் மேலும் 600 சேவைகள்
மக்கள் நேரடியாக அணுகும் முக்கியத் துறைகளில் மின்னாளுகைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது 131 சேவைகள் இ-சேவை மையங்கள் வாயிலாகவும், 55 சேவைகள் இணையதளம் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்திற்குள், 29 துறைகள் மூலமாக வழங்கப்படக்கூடிய 600-க்கும் மேற்பட்ட சேவைகளும் மின்னணு முறையில் வழங்கப்படும். அரசுத் திட்டங்களில் அனைத்து பயனாளிகளுக்குமான ஒற்றைத் தரவு ஆதாரமாக மாநிலக் குடும்பத் தரவு தளம் வலுப்படுத்தப்படும்.
ரூ.626 கோடி கோவில் சொத்துகள் மீட்பு
இந்த அரசு பதவியேற்ற 100 நாட்களுக்குள்ளே, ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்களுக்கு சொந்தமாக 187.91 ஏக்கர் நிலங்கள், 161.702 கிரவுண்டு காலிமனைகள், 1887.13 சதுர அடி பரப்புள்ள கட்டிடங்கள், 15.60 கிரவுண்டு பரப்புள்ள கோவில் குளக்கரை நிலங்கள் மீட்கப்பட்டு, அவை அவற்றிற்கு சொந்தமான கோவில்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட சொத்துகள் ரூ.626 கோடி மதிப்புடையவை ஆகும்.
இந்த ஆண்டில் 100 கோவில்களில் தேர், குளம், நந்தனம் ஆகியவற்றின் சீரமைக்கும் திருப்பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். கோவில்களை நிர்வகிக்க பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
போதிய நிதி வசதி இல்லாத 12,959 கோவில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில் ரூ.130 கோடியில் நிலை நிதி ஏற்படுத்தப்படும். இந்த நிலை நிதியின் மூலம் ஈட்டப்படும் வட்டித்தொகை, மேற்கண்ட கோவில்களின் தினசரி பூஜைக்கு பயன்படுத்தப்படும். பயிற்சி பெற்ற ஓதுவார்கள், அர்ச்சகர்களை உருவாக்கிட ஓதுவார் மற்றும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் புதுப்பிக்கப்படும். பழம்பெரும் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், பக்தர்களின் அனுபவத்தை அதிகரிப்பதற்கும் 539 கோவில்களுக்கான பெருந்திட்டங்கள் அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன.
300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்
சுற்றுலா பெருந்திட்டத்தின்கீழ் 300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். கன்னியாகுமரி மற்றும் பூம்புகாரில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அவற்றின் பழம்பெருமை மீட்டெடுக்கப்படும். மலைப்பிரதேசங்கள், அணைக்கட்டுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் அனுபவம் சார்ந்த மற்றும் சாகச சுற்றுலாக்கள் முகாம்கள் அமைத்து மேம்படுத்தப்படும்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு புத்துயிர் அளித்து, மகளிர் கல்வி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு ரூ.762.23 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
திருநங்கைகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 1,071 கைவிடப்பட்ட திருநங்கையர் பயன்பெறும் வகையில், மூன்றாம் பாலினத்தவருக்கான ஓய்வூதியத் திட்டத்திற்காக ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 5,963 பேர்
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்த குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு இந்த அரசு சிறப்பு முயற்சிகளை எடுத்துள்ளது. விரைவாகவும் கருணை உள்ளத்துடனும் நடவடிக்கைகள் மேற்கொண்ட முதல்-அமைச்சர், பெற்றோர் இருவரையும் இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.5 லட்சம் தொகை வழங்கப்படும் எனவும், ஏழைக்குடும்பத்தில் பெற்றோரில் ஒருவரை இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.3 லட்சம் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
மேலும், இந்தக் குழந்தைகளுக்கான கல்விச் செலவு முழுவதையும் அரசே பொறுப்பேற்றுக் கொள்ளும். இதுவரை 5,963 குழந்தைகள் அடையாளம் கண்டறியப்பட்டு, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.95.96 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டது.
மசூதி - தேவாலயம் புதுப்பிப்பு
மசூதிகள் மற்றும் தேவாலயங்களைப் புதுப்பிப்பதற்காக தலா ரூ.6 கோடி வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.