சிதிலமடைந்த பெருமாள் கோவிலை ரூ.3 கோடியில் புனரமைக்க திட்டம்

ஆண்டிப்பட்டி அருகே தெப்பம்பட்டியில் சிதிலமடைந்து காணப்படும் பழமையான ராயபெருமாள் கோவிலை சீரமைக்க ரூ.3 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சிதிலமடைந்த பெருமாள் கோவிலை ரூ.3 கோடியில் புனரமைக்க திட்டம்
Published on

புனரமைக்க திட்டம்

ஆண்டிப்பட்டி அருகே தெப்பம்பட்டியில் 1,000 ஆண்டுகள் பழமையான அகோபில ராயபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கோபுரங்கள், கல்தூண்களில் அழகிய சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் இந்த கோவில் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. இருப்பினும் இந்த கோவிலில் தற்போது வரை அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இதனால் பழமையான அகோபில ராயபெருமாள் கோவிலை புனரமைத்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று தெப்பம்பட்டி பெருமாள் கோவிலை புனரமைக்க மாநில வல்லுனர் குழு அனுமதி அளித்துள்ளது. மேலும் புனரமைப்பு பணிக்காக ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆணையர் ஆய்வு

இந்தநிலையில் தெப்பம்பட்டி பெருமாள் கோவிலின் தற்போதைய நிலை குறித்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், கோவிலின் தற்போதைய நிலை குறித்து எடுத்துக்கூறினார்.

இதேபோல் ராஜதானியில் சிதிலமடைந்து காணப்படும் பழமையான மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் உபயதாரர் மூலம் புதிதாக கட்டுவதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் சில காரணங்கள் துவங்கிய பணி நிறுத்தப்பட்டது. அந்த கோவிலையும் ஆணையர் முரளிதரன் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் கலைவாணன், கோவில் செயல் அலுவலர் நதியா, ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com