தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அரசியல் செய்வதற்கான விஷயமல்ல - வானதி சீனிவாசன்

வன்முறை பயன்படுத்தப்படக் கூடாது என்பதையும் இந்திய அரசு இலங்கையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
வானதி சீனிவாசன்
Published on: 

சென்னை,

பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வரலாற்றை மறைக்க முயற்சி

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நமது மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் தாயகம் திரும்ப வேண்டும் அவர்களது விசைப்படகும் மீட்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

ஆனால், இந்தச் சம்பவத்தைக் கொண்டு “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. மௌனம் காக்கிறது” என்று அரசியல் ஆதாயத்திற்காகப் பேசுவது உண்மையை மறைக்கும் செயல். 2014 முதல் மீனவர்களின் பாதுகாப்பையும் நலனையும் முன்னிறுத்தி, இலங்கையிடம் தூதரக ரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்பதில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் கடந்த 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்ததும் கோடிக்கணக்கான மதிப்புள்ள படகுகள் வீணடிக்கப்பட்டுள்ளதையும் மறந்துவிட்டு காங்கிரஸ் மாநில தலைவர் மத்திய பா.ஜ.க. அரசினையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சிப்பது வரலாற்றினை மறைப்பது போல உள்ளது.

2,004 இந்திய மீனவர்கள் மீட்பு

2019-லேயே மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, 2014 மே மாதத்திலிருந்து இலங்கையிடமிருந்து 2,004 இந்திய மீனவர்களும் 380 மீன்பிடிப் படகுகளும் மத்திய அரசின் தொடர் தூதரக முயற்சிகளால் விடுவிக்கப்பட்டிருந்தன.

மேலும், மீனவர்கள் பிரச்சினையை வெறும் எல்லைப் பிரச்சினையாக அணுகாமல், மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினையாக அணுக வேண்டும் எனவும் மீனவர்களுக்கு எதிராக எந்தச் சூழலிலும் வன்முறை பயன்படுத்தப்படக் கூடாது என்பதையும் இந்திய அரசு இலங்கையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

மீன்வளம் தொடர்பான இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழு (Joint Working Group on Fisheries - JWG), இருநாட்டு கடலோரக் காவல்படைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கான நடைமுறைகள் என நிரந்தரத் தீர்வை நோக்கிய பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை அதிபரிடம் வலியுறுத்தல்

2025 ஏப்ரலில் இலங்கை அதிபருடனான பேச்சுவார்த்தையின்போதுகூட பிரதமர் நரேந்திர மோடி மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை நேரடியாக எழுப்பி, மனிதாபிமான அணுகுமுறையுடன் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எனவே, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும் அவர்களை மீட்க இந்தியத் தூதரகம் மற்றும் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வரும் உண்மையை மறைத்துவிட்டு, “மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை” என்று பொய்யான அரசியல் பிரசாரம் செய்வதை நிறுத்த வேண்டும்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது விசைப்படகையும் விரைவாக மீட்டுத் தாயகம் அழைத்து வர தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளையும் மத்திய அரசு உறுதியாக மேற்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

காங்கிரஸ் தலைவர்கள் உணர வேண்டும்

தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அரசியல் செய்வதற்கான விஷயமல்ல. அது நமது மீனவச் சகோதரர்களின் வாழ்க்கை சார்ந்த பிரச்சினை என்பதை காங்கிரஸ் தலைவர்கள் உணர வேண்டும். அவர்களின் நலனுக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து துணை நிற்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com