மத்திய போலீஸ் கமாண்டன்ட் பணிக்கான நேர்முக தேர்வு முடிவு வெளியீடு: சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 9 பேர் வெற்றி

மத்திய ஆயுதப்படை போலீஸ் உதவி கமாண்டன்ட் பணிக்கான நேர்முகத் தேர்வு முடிவு வெளியானது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மத்திய போலீஸ் கமாண்டன்ட் பணிக்கான நேர்முக தேர்வு முடிவு வெளியீடு: சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 9 பேர் வெற்றி
Published on

சென்னை,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி, மத்திய ஆயுதப்படை போலீஸ் உதவி கமாண்டன்ட் (குரூப்-ஏ) பதவி களில் அடங்கிய எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.), மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.), இந்தோ- திபெத் எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி.), சாஷாஸ்த்ரா சீமாபால் (எஸ்.எஸ்.பி.) ஆகிய பிரிவுகளில் இருந்த 416 காலி இடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு 40 நகரங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வான 972 பேருக்கு நேர்முகத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்றது. நேர்முகத்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடந்தது.

நேர்முகத் தேர்வுக்கான பயிற்சியை சைதை துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகம் வழங்கியது. இதில் கலந்துகொண்டவர்களுக்கு நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து சிறந்த பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற பலர் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டனர்.

நேர்முகத் தேர்வு முடிவு நேற்று முன்தினம் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 9 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1) சி.எம்.போதிதர்மன், 2) சி.ராஜ்குமார், 3) கே.எம்.ஆகாஷ், 4) இ.யுவனேஷ், 5) டி.குணசேகர், 6) என்.தினேஷ்சுவாமி பிரசன்னா, 7) டி.குடியரசு, 8) என்.பாலமுருகன், 9) எம்.அசோக்குமார். இவர்களில் அகில இந்திய அளவில் சி.எம்.போதிதர்மன் 59-வது இடத்தையும், சி.ராஜ்குமார் 61-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த 9 பேரும் எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை, இந்தோ-திபெத் எல்லை போலீஸ், சாஷாஸ்த்ரா சீமாபால் போன்ற பிரிவுகளில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

இந்த தகவலை மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com