

வேலூர்,
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு தற்போது மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
தேர்தலுக்காகவே வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சாத்தூரில் நடந்த வெடி விபத்து குறித்து பேசிய அவர், பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் உயிரிழப்பை தடுக்க, மாற்றுத்தொழிலை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆண்டு தோறும் நடக்கும் உயிரிழப்புக்களை தடுக்க பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினார்.