திருவனந்தபுரம் - தாம்பரம் உள்ளிட்ட 3 அம்ரித் பாரத் ரெயில்களுக்கான அட்டவணை வெளியானது


திருவனந்தபுரம் - தாம்பரம் உள்ளிட்ட 3 அம்ரித் பாரத் ரெயில்களுக்கான அட்டவணை வெளியானது
x

கேரளாவில் இன்று 4 புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை,

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று காலை திருவனந்தபுரத்திற்கு வந்தார். திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற ரெயில்வே விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில் நாகர்கோவில்-மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம்-ஐதராபாத் ஆகிய 3 வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரெயில்கள் மற்றும் குருவாயூர்-திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் என 4 புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரெயிலுக்கான கிழமைகள், நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது இந்த 4 ரெயில்களுக்கான அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

தாம்பரம் - திருவனந்தபுரம் (16121/16122)

தாம்பரம் - திருவனந்தபுரம் இடையே அம்ரித் பாரத் விரைவு ரெயில் (வண்டி எண் 16121) வருகிற 28ம் தேதி முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 8 மணிக்கு திருவணந்தபுரம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் அம்ரித் பாரத் விரைவு ரெயில் (வண்டி எண் 16122) வருகிற 29ம் தேதி முதல் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

சார்லபள்ளி - திருவனந்தபுரம் (17041/17042)

சார்லபள்ளியில் இருந்து திருவனந்தபுரம் இடையே அம்ரித் பாரத் விரைவு ரெயில் (வண்டி எண் 17041) வருகிற 27ம் தேதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் சார்லபள்ளியில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மதியம் 2.45 மணிக்கு திருவணந்தபுரம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சார்லபள்ளி செல்லும் அம்ரித் பாரத் விரைவு ரெயில் (வண்டி எண் 17042) வருகிற 28ம் தேதி முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

நாகர்கோவில் - மங்களூரு (16329/16330)

நாகர்கோவிலில் இருந்து மங்களூரு செல்லும் அம்ரித் பாரத் விரைவு ரெயில் (வண்டி எண் 16329) வருகிற 27ம் தேதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் நாகர்கோவிலில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 5 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

மறுமார்க்கத்தில், மங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அம்ரித் பாரத் விரைவு ரெயில் (வண்டி எண் 16330) வருகிற 28ம் தேதி முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் மங்களூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 10.05 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.

திருச்சூர் - குருவாயூர் பயணிகள் ரெயில்

திருச்சூரில் இருந்து குருவாயூர் செல்லும் தினசரி பயணிகள் ரெயில் (வண்டி எண் 56115) வருகிற 26ம் தேதி முதல் திருச்சூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 8.45 மணிக்கு குருவாயூர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், குருவாயூரில் இருந்து திருச்சூர் செல்லும் தினசரி பயணிகள் ரெயில் (வண்டி எண் 56116) வருகிற 26ம் தேதி முதல் குருவாயூரில் இருந்து இரவு 6.10 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 6.50 மணிக்கு திருச்சூர் வந்து சேரும்.

இந்த 3 அம்ரித் பாரத் விரைவு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

1 More update

Next Story