திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்

பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடினர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முன்தினம், மறுதினங்களில் காலையில் கடல் உள்வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 18-ந்தேதி அமாவாசை இருந்தது. இதையொட்டி நேற்று திருச்செந்தூர் கோவில் முன்புறம் உள்ள படிக்கட்டு முகப்பு பகுதியில் 2-வது முறையாக கடல் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.
ஏற்கனவே கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் கடல் உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இருந்தபோதிலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி கடலில் புனித நீராடினர். மாலையில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. கடந்த 4-ந்தேதி பவுர்ணமியையொட்டி இதே முகப்பு பகுதியில் சுமார் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக சுப்பிரமணிய சுவாமி கோவில், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கு இடைப்பட்ட கடற்பகுதியில்தான் கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறான இடத்தில் கடல் உள்வாங்கியதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சுமார் 2 மாத காலங்களாக கோவில் முன்புள்ள கடற்கரைக்கு இறங்கும் படிக்கட்டு பகுதியில் இருந்து சுமார் 200 அடி நீளத்திற்கும், 4 அடி ஆழத்திற்கும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் கடற்கரைக்கு இறங்கும் படிக்கட்டு பகுதியில் இருந்து சுமார் 200 அடி நீளத்திற்கு கம்புகள் மற்றும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.






