புலியை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பேச்சிப்பாறை அருகே அட்டகாசம் செய்து வந்த புலியின் நடமாட்டம் கடந்த 1 வாரமாக தென்படவில்லை. இதனால் புலியை தேடி பிடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இந்த பணிகளில் ஈடுபட்டு வந்த எலைட் படையினர் மதுரையில் உள்ள தங்களது முகாமிற்கு திரும்பினர்.
புலியை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
Published on

குலசேகரம், 

பேச்சிப்பாறை அருகே அட்டகாசம் செய்து வந்த புலியின் நடமாட்டம் கடந்த 1 வாரமாக தென்படவில்லை. இதனால் புலியை தேடி பிடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இந்த பணிகளில் ஈடுபட்டு வந்த எலைட் படையினர் மதுரையில் உள்ள தங்களது முகாமிற்கு திரும்பினர்.

அட்டகாசம் செய்த புலி

பேச்சிப்பாறை அருகே சிற்றாறு அரசு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மற்றும் மூக்கறைக்கல் உள்ளிட்ட பழங்குடி குடியிருப்புகளில் ஒரு புலி புகுந்து ஆடு, மாடுகளை அடித்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த புலியைப் பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக புலியை காட்டுக்குள் சென்று தேடி பிடிக்கும் வகையில் சிறப்பு பயிற்சி பெற்ற 'எலைட் படையினர்' கடந்த 22- ந் தேதி மதுரையில் இருந்து சிற்றார் பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். இவர்களுடன் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் டாக்டர்களும் புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன் புலியைக் கூண்டில் சிக்க வைக்கும் பணிகளும் நடந்தது.

நடமாட்டம் இல்ல

இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக புலி குடியிருப்புக்குள் வரவில்லை. மேலும் வனப்பகுதிகளில் குறிப்பிட்ட தூரத்திற்கு அதன் நடமாட்டம் குறித்த அடையாளங்கள் தென்படவில்லை.

வனப்பகுதியில் வனத்துறையினரின் தேடுதல் காரணமாக, குறிப்பாக வனப்பகுதியில் மனித நடமாட்டம் காரணமாக புலி உள்காட்டில் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதையடுத்து புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த எலைட் படையினர் தங்களது தேடும் பணியை நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தினர். அத்துடன் இந்த படையினர் மதுரையில் உள்ள தங்களது முகாமிற்கு நேற்று திரும்பினர்.

விழிப்புணர்வு கூட்டம்

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'கடந்த ஒரு வார காலமாக புலியின் நடமாட்டம் தென்படவில்லை. புலி உள்காட்டிற்கு சென்று அங்குள்ள வேறு விலங்குகளை வேட்டையாடி தின்று கொண்டிருக்கலாம். அல்லது சில நாட்கள் பதுங்கி விட்டு மீண்டும் வெளிப் பகுதிக்கு வரலாம். எனவே புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட எலைட் படையினர் தங்களது பணியை தற்காலிமாக நிறுத்தி விட்டு முகாமிற்கு திரும்பியுள்ளனர்.

அதே வேளையில் புலியைக் கூண்டுகளில் சிக்க வைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். இந்தநிலையில் குடியிருப்பு மக்களுக்கு புலி தொடர்பாக எச்சரிக்கை செய்யும் வகையில் சனிக்கிழமை விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும்' என்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com