

சென்னை,
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1952-ம் ஆண்டு முதல் ஜனநாயக முறைப்படி சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களே அந்தந்த மாநில சட்டசபைகளில் மக்களுக்காக குரல் கொடுக்க முடியும்.
சட்டசபை என்பது சட்டங்கள் இயற்கும் இடமாகும். மேலும், சட்டங்களை திருத்த பயன்படுவதுடன் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் இடமாகவும் இருந்து வருகிறது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் சட்டசபை கூடும் நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஆண்டின் தொடக்கமாக முதல் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது.
அதன்பிறகு, பட்ஜெட் கூட்டமும், தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறுகிறது. மழைக்காலத்திற்கு முன்பாக, மழைக்கால கூட்ட தொடரும் நடக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஆண்டுக்கு 100 நாட்களுக்கு குறையாமல் சட்டசபை கூட்டம் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2021-ம் ஆண்டு மே முதல் 2026-ம் ஆண்டு பிப்ரவரி வரை 5 ஆண்டுகளில் 161 நாட்கள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதுவரை, 73 ஆண்டு கால சட்டசபை வரலாற்றில் குறைந்த நாட்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது இந்த முறைதான். இதற்கு முன்பு1989-1991-ம் ஆண்டு காலத்தில் 104 நாட்களே சட்டசபை கூட்டம் நடைபெற்றாலும், அப்போதைய ஆட்சி காலம் 3 ஆண்டுகளுக்கும் குறைவுதான். இதுவரை நடைபெற்ற 16 சட்டசபை காலத்தில் கூட்டம் நடைபெற்ற நாட்கள் விவரம் வருமாறு:-
ஆண்டு - கூடிய நாட்கள்:-
1952-1957 - 314
1957-1961 - 305
1962-1967 - 252
1967-1971 - 199
1971-1976 - 326
1977-1980 - 179
1980-1984 - 304
1985-1988 - 178
1989-1991 - 104
1991-1996 - 224
1996-2001 - 264
2001-2006 - 182
2006-2011 - 226
2011-2016 - 191
2016-2021 - 162
2021-2026 - 161