மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின் தனி சிறப்பு

திருக்கல்யாணம் அன்று மட்டும் மீனாட்சி அம்மனுக்கு பிட்டத்தகடு அணிவிக்கப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின் தனி சிறப்பு
Published on

மதுரை,

மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் மற்றும் சுவாமிக்கென பாண்டிய மன்னர்கள் காலம் தொட்டு பலர் வழங்கிய பவளம், முத்து, வைரம் பதித்த ஏராளமான நகைகள், கிரீடங்கள், பதக்க மாலைகள் இருந்தாலும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கென பிரத்யேக ஆபரணங்கள் அணிவித்து வருவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

மணமகன் சுந்தரேசுவரருக்கு பவளங்கள் பதித்து கல்யாண கிரீடமும் , அம்மனுக்கு ராயர் கிரீடமும் அணிவிக்கிறார்கள், இதில் ராயர் கிரீடம் ஹம்பி நகரத்து மன்னர் ராயர் வழங்கியதால் அதனை ராயர் கிரீடம் என்கிறார்கள். இதனாலேயே மீனாட்சியம்மன் பட்டாபிஷேகத்தின்போது இந்த கிரீடம் அணிவிக்கப்படுகிறது.

இந்த வைரக்கிரிடம் மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள நகைகளில் முதன்மையானது. இதன் உயரம் 14.5 அங்குலம், அடிப்பாகத்தின் சுற்றளவு 20 அங்குலம். சிற்ப நூல்களில் கூறப்பட்டுள்ள அளவு, அமைப்பு முறைகளுக்கு ஏற்ப இந்த கிரீடம் செய்யப்பட்டுள்ளது. கிரீடத்தின் மேற் கலசம், தாமரை மொட்டுப் போன்றது. நடுப்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தாமரையின் இரண்டு பக்கங்களிலும் அன்னப் பறவைகள் விளையாடுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

நெற்றி மாணிக்கத் திலகத்தைச் சுற்றிலும் மூன்று வைர வளையங்கள் அழகு செய்கின்றன.அதன் பக்கங்களில் இரண்டு மகர மீன்கள் காட்சியளிக்கின்றன. கிரீடத்தின் நடுவே பெரிய மரகதம் ஒன்று எழிலுடன் மின்னுகிறது. கிரீடத்தின் முன் புறம் வைரக்கற்களாலும், பின் புறம் சிவப்புக் கற்களாலும் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளங்கை அளவுக்கு வட்டமான நீல கல் பதக்கம் நாயக்கர் காலத்தில் வழங்கியது பார்ப்போரை மயங்க வைக்கும்.'இதன் மதிப்பு எவ்வளவு? ' என ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பிய போது,' மதிப்பிட முடியாத பதக்கம் ' என்ற ஆச்சரியமான தகவலோடு, பதக்கம் திரும்பி வந்தது . இங்குள்ள முகலாய கிரீடம், மாம்பழக் கொண்டை கிரீடம், முத்து உச்சிக் கொண்ட கிரீடம், கல்யாண கிரீடம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும்.

இது தவிர, பச்சைக்கல் தங்கப்பதக்கம், நளப்பதக்கம் என சித்திரை 10 நாள் திருவிழாக்களில் ஒவ்வொரு நாளும் அம்மனும், சுவாமியும் விதவிதமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகின்றனர். எந்தத் திருவிழாவிற்கு எந்த ஆபரணம், கிரீடம் என கோவில் பட்டர்கள் ஆலோசித்து, சூட்டுகிறார்கள். மேலும் திருக்கல்யாணம் அன்று மட்டும் அம்மனுக்கு பிட்டத்தகடு அணிவிக்கப்படுகிறது. அதாவது அம்மனின் பின் பகுதியில் பொருத்தப்படும் கவசங்கள்.

இது மட்டுமல்லாமல் பொட்டுக்காரைத் தாலி, கல் இழைத்த தாலி, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சித்தர் பதக்கம், அம்மனுக்கு தங்கச்சடை அலங்காரம் என தங்கத்தினாலான ஆபரணங்களாலேயே சிங்காரிக்கப் படுகிறது. திருக்கல்யாணத்திற்கு வருபவர்களை வரவேற்கும் சந்தனக்கும்பா பன்னீர் செம்பு, நெய் ஊற்றி வேள்வி வளர்க்க தங்கத் தேக்கரண்டி என 'திருவாபரணம்' எல்லாமே தங்கத்தில் இருப்பது திருக்கல்யாணத்தின் சிறப்பு.

மீனாட்சியம்மன் கோவிலுக்குக் காணிக்கையாக செய்தளிக்கப்பட்ட நகைகள் விலைமதிப்புள்ளவை . நம்நாட்டு ஆபரணக்கலை வரலாற்றை அறிய உதவுபவை.முத்துவிதானம், நீல மேகப்பதக்கம் , முத்து - நவரத்னக் கிரீடங்கள், ரோமன் நாணயங்களை கொண்டு செய்த காசு மாலைகள், பவளக் கொடி - என பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டுப் பாதுகாக்கப்பட்டு வருபவை.

இவற்றை பார்வையிட, இளவரசியுடன் வந்த எட்டாம் எட்வர்டு மன்னர் - தம் தாயார் விக்டோரியா மகாராணியாரும் பார்த்து மகிழவேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே அரசின் அனுமதியோடு அவை இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு -ஆறு மாதங்கள் வைத்திருந்த பின்னர், பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டதாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com