ஆவடியில் அதிநவீன பீரங்கி கண்காட்சி 19-ந்தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்

ஆவடியில் அதிநவீன பீரங்கி கண்காட்சி நேற்று தொடங்கியது. 19-ந்தேதி வரை இதனை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.
ஆவடியில் அதிநவீன பீரங்கி கண்காட்சி 19-ந்தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்
Published on

ஆவடி,

75-வது சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்தையொட்டி ஆவடி கனரக வாகன தொழிற்சாலை (எச்.வி.எப்.) வளாகத்தில் உள்ள அஜய் ஸ்டேடியத்தில் அதிநவீன முதன்மை பீரங்கி கண்காட்சி நேற்று தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.

இந்த கண்காட்சியில் அஜய்-டி-72, பீஸ்மா-டி-90, அருண் எம்.கே.ஐ. மற்றும் பிரிட்ஜ் லேயர் டேங்க் (பி.எல்.டி.)-டி72 ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. கியர் பாக்ஸ், என்ஜின்கள், டிராக் வீல்கள் போன்ற பீரங்கிகளின் பல்வேறு பாகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

இதனை நேற்று பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெருமளவில் வந்து ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். சிலர் செல்போனில் படம் மற்றும் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

குண்டு துளைக்காத ஹெல்மெட்

இதேபோல் ஆவடியில் உள்ள படைக்கல ஆடைகள் தொழிற்சாலை (ஓ.சி.எப்.) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகளை தடுக்கும் தலைக்கவசத்தை தயாரித்து உள்ளது. அதனை நேற்று பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தி இருந்தனர். இந்த தலைக்கவசம் 9 மி.மீ. அளவுகொண்ட தோட்டாக்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.

அத்துடன் இந்த கண்காட்சியில் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் மற்றும் ஆடைகள், மேம்படுத்தப்பட்ட போர் சீருடைகள், கூடாரங்கள், பாராசூட்டுகள், குளிர்கால ஆடைகள் போன்ற பல்வேறு தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் ஆவடியில் உள்ள பீரங்கிகள் சுடும் பயிற்சி மைதானத்தில் பி.எல்.டி. என்ற வாகன செயல்பாடுகள் மற்றும் பழுதுபார்க்கும் வாகனம் ஆகியவையும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com