

சென்னை,
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த பயிற்சி மையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 72 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றனர். அவர்களில் நன்றாக படிக்கும் 3 ஆயிரத்து 200 பேருக்கு ஆங்காங்கே உள்ள கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு தங்கும் வசதி, சாப்பாடு ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வாறு பயிற்சி பெற்றவர்களில் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாணவிகளும் உண்டு.
சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. ஆண்கள் பள்ளியில் நீட் தேர்வு எழுதிய அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி செந்தாரகை கூறியதாவது.
நான் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறேன். பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி எங்களை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அனுப்பி படிக்க வைத்தார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி நடைபெற்றது. அதன்பிறகு சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்பு பயிற்சி பெற்றோம்.
நேற்று நடந்த நீட் தேர்வில் உயிரியல் தேர்வு எளிதாக இருந்தது. அதில் பல கேள்விகள் அரசு பயிற்சி மையத்தில் சொல்லிக் கொடுத்தவை. வேதியியலில் இருந்தும் சொல்லிக் கொடுத்த கேள்விகள் வந்தன. மொத்தத்தில் அரசு அளித்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நான் ஆவடியை சேர்ந்தவள். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்துள்ளேன். நீட் தேர்வில் 90 கேள்விகள் உயிரியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் எளிதாக இருந்தன. வேதியியல் கேள்விகளும் எழுதும்படி இருந்தன. ஆனால் அதில் உள்ள கணக்குகள் சற்று கடினமாக கேட்கப்பட்டிருந்தன. இயற்பியல் பகுதியில் உள்ள கேள்விகளும் கடினமாக இருந்தன. இருப்பினும் அவற்றை எழுதினேன். தவறான கேள்விக்கு மதிப்பெண்ணை கழிப்பதால் சில கேள்விகளுக்கு பதில் எழுதாமல் தவிர்த்து விட்டேன்.
தூத்துக்குடியில் ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்துள்ளேன். திருநெல்வேலி, மதுரை, சென்னை ஆகிய சென்டர்கள் வாய்ப்பு கேட்டேன். சென்னையில் கிடைத்துள்ளது.
உயிரியல் பகுதி கேள்விகள் எளிதாக இருந்தன. வேதியியலில் கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. இயற்பியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் மிகவும் புரிந்து எழுதும்படி கேட்கப்பட்டிருந்தன. பல கேள்விகளை உருமாற்றி கேட்டிருந்தனர்.
திருவள்ளூர் மணவாளநகரில் உள்ள மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். உயிரியல் பாடப்பகுதியில் இருந்து கேட்டகேள்விகள் எளிதாக இருந்தன. இயற்பியல் பகுதி கேள்விகள் மிகவும் கடினமாகத்தான் இருந்தன. வேதியியல் பகுதி கேள்விகள் பல எளிமையாக இருந்தன. சில கேள்விகள் மட்டும் கடினமாக இருந்தன.
சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தமிழ் வழியில் படித்தவர் சுப்பலட்சுமி. இவர், கே.கே.நகரில் தமிழக அரசு நடத்திய இலவச நீட் பயிற்சி மையத்தில் (நிர்மலா மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில்) பயிற்சி பெற்றார். பின்னர் அவர், நேற்று நீட் தேர்வை எழுதினார்.
அவர் கூறுகையில், சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வருகிறேன். நான் கே.கே.நகரில் அரசு நடத்திய இலவச நீட் பயிற்சி மையத்தில் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பயிற்சி பெற்றேன். பயிற்சியின்போது தரப்பட்ட குறிப்புகளும், மாதிரி வினாத்தாள்களும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தேர்வை சிரமமின்றி எழுத அரசின் பயிற்சி மையம் பெரிதும் கைகொடுத்தது. முக்கியமாக நீட் தேர்வுக்கான பயிற்சி தமிழ் வழியிலும் சொல்லித்தரப்பட்டது. பயிற்சியின்போது தரப்பட்ட குறிப்புகளை கவனமாக படித்தேன். அது இன்றைய (நேற்று) நீட் தேர்வில் பயன்தந்தது. தேர்வுவில் பல கேள்விகளுக்கு என்னால் எளிதாக விடை அளிக்க முடிந்தது. அதற்கு அரசு பயிற்சி மையத்துக்கு என் மனமார நன்றியை தெரிவித்து கொள்கிறேன், என்றார்.