அத்திவரதர் சிலை வைக்கும் குளத்தை எந்த தண்ணீர் கொண்டு நிரப்ப வேண்டும்? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

அத்திவரதர் சிலை வைக்கும் குளத்தை எந்த தண்ணீரை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அத்திவரதர் சிலை வைக்கும் குளத்தை எந்த தண்ணீர் கொண்டு நிரப்ப வேண்டும்? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

அத்திவரதர் வைக்கப்படவுள்ள அனந்தசரஸ் குளத்தை முறையாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்று அசோகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண் மற்றும் நிரப்பப்படவுள்ள தண்ணீரின் தன்மை குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அனந்தசரஸ் குளம் மோசமாக பராமரிக்கப்பட்டுள்ளது. எனவே அனந்தசரஸ் குளத்தில் நிரப்பப்படவுள்ள தண்ணீரின் தன்மை குறித்து வருகிற 19-ந்தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றார்.

அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வக்கீல் காசிராஜன், அத்திவரதர் வைக்கப்படும் இடத்தை நிரப்ப 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். பொற்றாமரைக் குளத்தில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு கூட தகுதியான தண்ணீர் இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே பொற்றாமரைக் குளத்தில் உள்ள தண்ணீருடன் சேர்த்து ஆழ்துளை கிணற்று நீரையும் உபயோகப்படுத்தலாம் என்றார்.

அப்போது நீதிபதி, அனந்தசரஸ் குளத்தை போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்யவேண்டும். ஏற்கனவே சென்னையில் உள்ள ஒரு கோவில் குளத்தை திறம்பட சுத்தம் செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,) வீரர்களை ஏன் அனுப்பக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளடர் எம்.மகாராஜா, அனந்தசரஸ் குளத்தை உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து அறநிலையத்துறை தூர்வாரி சுத்தம் செய்யும் பணியை 90 சதவீதம் சிறப்பாக செய்து முடித்து விட்டது. இன்னும் 10 சதவீத பணிகளும் இரவோடு, இரவாக முடிந்து விடும்.

இப்பணிகளை கண்காணிக்க கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இறுதிகட்டப் பணிகளையும் நாங்களே (அரசு பிளடர் கள் எம்.மகாராஜா, கார்த்திகேயன், காசிராஜன்) நேரில் சென்று கண்காணிக்கின்றோம். அனந்தசரஸ் குளத்தை சிறப்பாக சுத்தம் செய்தனர் என்ற பெயரும் புகழும் அறநிலையத்துறைக்கே கிடைக்க வேண்டும். மேலும் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக அத்திவரதர் வைக்கப்படும் அறைக்குள் தானாகவே நீர் சுரந்து வருகிறது, என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குளத்தை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தால் நல்லதுதான். சி.ஐ.எஸ்.எப்., தேவையில்லை என்று கூறினார்.

பின்னர், அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் அறையை சுத்தமான தண்ணீரால் நிரப்ப வேண்டும். அதுபோல அனந்தசரஸ் குளத்தை எந்த தண்ணீரால் நிரப்ப வேண்டும்? என்பது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வருகிற 19-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com