புயல் பாதித்த பகுதியில் மீண்டும் கனமழை கும்பகோணத்தில் கோவில்களுக்குள் வெள்ளம் புகுந்தது

புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று மீண்டும் கனமழை பெய்தது. கும்பகோணத்தில் கோவில்களுக் குள் வெள்ளம் புகுந்தது.
புயல் பாதித்த பகுதியில் மீண்டும் கனமழை கும்பகோணத்தில் கோவில்களுக்குள் வெள்ளம் புகுந்தது
Published on

தஞ்சாவூர்,

கஜா புயல்-மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் மழை பெய்தது. நேற்று கனமழை வெளுத்து வாங்கியது.

தஞ்சையில் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கிய மழை மதியம் வரை இடைவிடாமல் கொட்டியது. பின்னர் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

இந்த மாவட்டத்தில் பாபநாசம், கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவையாறு, அய்யம்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, வல்லம், கல்லணை உள்பட பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், வியாழசோமேஸ்வரர் கோவில், காசிவிசுவநாதர் கோவில் உள்பட கும்பகோணம் நகரில் உள்ள பெரும்பாலான கோவில்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு லேசாக மழை பெய்தது. நேற்று காலையில் இருந்து இரவு வரையில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், நன்னிலம், நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.

நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் 14.3 செ.மீ. மழை பெய்தது. கும்பகோணத்தில் 11.5 செ.மீ., தஞ்சையில் 2.6 செ.மீ. மழையும், திருவையாறில் 6.4 செ.மீ. மழையும் பெய்தது.

பலத்த மழை தொடர்ந்து பெய்ததால் டெல்டா மாவட்டங்களில் நிவாரண பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சேதம் அடைந்த மின்சார கம்பங்கள் நடும் பணி, சாய்ந்து கிடந்த மின்மாற்றிகளை சீரமைக்கும் பணி, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நிவாரண பொருட்களை எடுத்து செல்லும் பணி உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

ஆறுகளில் வெள்ளம்

கடலூரில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை விடிய, விடிய மழை கொட்டியது. இதேபோல் மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது,

இதனால் கெடிலம் மற்றும் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெண்ணையாற்றின் குறுக்கே புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதேபோல் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள திருவந்திபுரம் அணைக்கட்டும், கம்மியம்பேட்டையில் உள்ள தடுப்பணையும் நிரம்பி வழிகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திண்டிவனம், மேல்மலையனூர், கள்ளக்குறிச்சி, மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை நீடித்தது. திண்டிவனத்தில் தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. மரக்காணம் பகுதியில் பெய்த பலத்த மழையால் ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அசப்பூர்-ராயநல்லூர் இடையே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

திருச்சியில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இதேபோல மாவட்டத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி மற்றும் மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் தவிர மற்ற இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் புயல் பாதிப்பு பகுதிகளில் நடைபெற்று வந்த மீட்பு மற்றும் நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டன.

கரூர் மாவட்டத்தில் கரூர், தாந்தோணிமலை, பசுபதிபாளையம், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரம்பலூரில் நேற்று இடி, மின்னலுடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் கல்லாறு, கோரையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆதனூரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி இந்துமதி (வயது 27) மற்றும் ராஜதுரை ஆகியோர் காட்டில் ஆடு, மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்திலும் கனமழை பெய்தது. இதனால் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com