கூவம் ஆற்றில் குதித்து.. மாணவி எடுத்த விபரீத முடிவு.. உருக்கமான கடிதம் சிக்கியது

மாணவியின் செல்போன் அழைப்புகளையும், சமூக வலைத்தள சாட்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் யுவஸ்ரீ என்ற மாணவி எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை காமராஜர் சாலையிலுள்ள நேப்பியர் பாலம் அருகே அவர் சென்று கொண்டிருந்தார். திடீரென யுவஸ்ரீ பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குத்தித்தார். இதைக்கண்ட அந்தவழியாக சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கிருந்த பையை கைப்பற்றி நடத்திய ஆய்வில் தற்கொலை குறிப்பு ஒன்று கிடைத்தது. அதில் ‘எனக்கு வாழப்பிடிக்கவில்லை. தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. பெற்றோரும் சகோதரியும் என்னை மன்னியுங்கள்’ என்று எழுதப்பட்டு இருந்தது.
இதையடுத்து தீயணைப்பு படையினர் படகு மூலம் யுவஸ்ரீயின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மெரினா கடல் பகுதியில் நேற்று முன்தினம் யுவஸ்ரீயின் உடல் கரை ஒதுங்கியது. போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கு காதல் தோல்வி காரணமா? அல்லது வீட்டில் ஏதாவது பிரச்சினையா? பல்கலைக்கழகத்தில் ஏதாவது பிரச்சினையா’ என விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர், தோழிகளை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் செல்போன் அழைப்புகளையும், சமூக வலைத்தள சாட்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.






