

வரத்து குறைவு
புதுக்கோட்டை மாவட்டம் வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் வாழை விவசாயம் ஓரளவு நடைபெறுகிறது. ஆழ்குழாய் கிணறு, குளத்து பாசனம், பருவ மழையை நம்பி வாழை சாகுபடி காணப்படுகிறது. புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வாழைத்தார் ஏலக்கடைகள் உள்ளது. இங்கு மாவட்டத்தில் விளையும் வாழைத்தார்கள் மொத்தமாக விற்பனைக்காக கொண்டுவரப்படுவது உண்டு.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாழைத்தார்கள் வரத்து குறைந்துள்ளது. ஏலக்கடைகளுக்கு நேற்றும் குறைந்த அளவே வாழைத்தார்கள் வந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல வாழைத்தார்களின் விலையும் சற்று குறைந்திருந்தது. பூவன் தார் கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரைக்கும், செவ்வாழை ரூ.600 முதலும் விற்பனையாகுவதாக தெரிவித்தனர்.
ஆயுத பூஜை பண்டிகை
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, வடகாடு உள்பட பரவலான இடங்களில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி உள்ளது. இதில் பூவன், ரஸ்தாலி, செவ்வாழை, ஏலரசி, கற்பூரவள்ளி உள்ளிட்ட வாழை வகைகள் காணப்படுகிறது. கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு பலத்த காற்று வீசியதில் ஓரிரு இடங்களில் ஏராளமான வாழை மரங்கள் காற்றில் சரிந்து விழுந்தன. இதனால் வாழை உற்பத்தி பாதிப்படைந்தது.
அதனால் தான் தற்போது வாழை உற்பத்தி குறைந்துள்ளதால் ஏலக்கடைகளுக்கு வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது. ஓரளவு வாழைத்தார்கள் குலை தள்ளிய நிலையில் காணப்படுவதை பண்டிகை காலத்தையொட்டி கொண்டு வர முடிவு செய்திருப்பார்கள். வருகிற 23-ந் தேதி ஆயுதபூஜை வர உள்ளதால் இந்த மாதத்தில் 3-வது வாரத்தில் வாழைத்தார்கள் வரத்து அதிகமாக காணப்படும். அப்போது விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ஏலக்கடையில் வாழைத்தார் குறைந்த விலைக்கு ஏலம் போனாலும் கடைகளில் வாழைப்பழத்தின் விலை சற்று கூடுதலாக தான் உள்ளது'' என்றனர்.