உயிர் தப்பிய விமானிக்கு பெங்களூரு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய விமானி வருண்சிங் பெங்களூரு ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிர் தப்பிய விமானிக்கு பெங்களூரு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
Published on

கோவை,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் இறந்தனர்.

இதில் உயிர் தப்பியவர் விங் கமாண்டர் (விமானி) வருண்சிங் ஆவார். இவர் 80 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வெலிங்டனில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெங்களூரு ஆஸ்பத்திரி

இந்த நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக பெங்களூரு ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று மதியம் வருண்சிங் ஆம்புலன்ஸ் மூலம் வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரியில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு நேற்று மாலை 5 மணியளவில் வருண்சிங் கொண்டு செல்லப்பட்டார். அந்த விமானம் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த அதிநவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரை ஏற்றி கப்பன் பூங்கா அருகே உள்ள ராணுவ கமாண்டோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அதிநவீன வசதிகள்

அவர் இன்னும் ஆபத்தான கட்டத்திலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கமாண்டோ ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகள் உள்ளன. அதனால் அவரை காப்பாற்ற டாக்டர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com