மருதமலையில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை - அமைச்சர் சேகர்பாபு

நடப்பாண்டு ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
மருதமலையில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை - அமைச்சர் சேகர்பாபு
Published on

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்தார். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அப்போது மருதமலையில் முருகனுக்கு 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்றார்.

கோவை மாவட்டம், மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் அறுங்கோண வடிவத்தில் அமைக்கப்படுவதுடன், புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் புதிதாக 184 அடிஉயர முருகன் சிலை அமைக்கப்படும் என்றார்.

அதேபோல, ஈரோடு மாவட்டம், திண்டல் - வேலாயுத சுவாமி திருக்கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக 180 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்றும், ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி - சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.6.83 கோடி மதிப்பீட்டில் புதியதாக 114 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கடற்கரை கடல் அரிப்பை தடுக்கும் பணி மொத்தம் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார். கடந்த 3 ஆண்டுகளில் கோயில்களின் சார்பில் 4 கிராம் தங்க தாலி உட்பட சீர் வரிசைகள் வழங்கி ஆயிரத்து 800 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாகவும், நடப்பாண்டும் ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருவிழா நாட்களில் கட்டணத் தரிசனம் ரத்து எனவும் அவர் அறிவித்தார். ஒரு கால பூஜை திட்டத்தில் அர்ச்சகர்களுக்கு மானியம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com