முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் 31-ந்தேதி நடக்கிறது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 31-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் 31-ந்தேதி நடக்கிறது
Published on

சென்னை,

தமிழக தொழில்துறை சார்பில் வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந்தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக முடிப்பதோடு தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை கொண்டு வருவதற்கான முழு முயற்சிகளை தொழில்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் பல புதிய தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களுக்கான விரிவாக்கத்திற்கு அனுமதி கேட்டும் தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்கள் வந்துள்ளன.'

அமைச்சர்களுக்கு கடிதம்

இந்த நிலையில் தமிழக அமைச்சரவையின் கூட்டம் வரும் 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், 31.10.2023 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த விவரங்கள் தனியாக அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கவர்னர் குற்றச்சாட்டு

தமிழக கவர்னர் மாளிகைக்கு வெளியே நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதுசம்பந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஆளும் கட்சியான தி.மு.க.வையும் கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதை சற்று கவனமாக தமிழக அரசு உற்று நோக்குகிறது. எனவே இது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com