தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, கிரிஷ் சோடாங்கருடன் உறுதியாக நிற்கிறது - செல்வப்பெருந்தகை

கிரிஷ் சோடாங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆர்.க்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, கிரிஷ் சோடாங்கருடன் உறுதியாக நிற்கிறது - செல்வப்பெருந்தகை
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கோவா மாநிலத்தில் சூதாட்ட (காசினோ) கலாச்சாரத்திற்கு எதிராக மக்கள் நலன் கருதி தொடர்ந்து வலியுறுத்தி வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆர்.(FIR)க்கு நான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள மிக முக்கியமான அரசியல் தருணத்தில், அவரை திட்டமிட்டு அரசியல் ரீதியாக முடக்க முயலும் சதியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. மக்களின் குரலாக பேசும் தலைவர்களை குறிவைத்து சட்டத்தின் பெயரில் அழுத்தம் கொடுப்பது ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளைப் பாதிக்கும் செயல்.

சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது குற்றமல்ல அது ஒரு பொது பொறுப்பு. அந்த பொறுப்பை நிறைவேற்றியதற்காக ஒருவரை இலக்காகக் கொண்டு வழக்குகள் பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது. சட்ட அமலாக்க அமைப்புகள் எந்தவித அரசியல் அழுத்தங்களுக்கும் உட்படாமல், நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். எதிர்க்குரல்களை ஒடுக்க முயலும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, கிரிஷ் சோடாங்கருடன் உறுதியாக நிற்கிறது. இந்த வழக்கில் உண்மை மற்றும் நீதி வெல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com